திருமலைக்கோடி முதல் வேடந்தாங்கல்

 

மாட்டுப் பொங்கல் தினத்தில் எனது பயணம்:திருமலைக்கோடி முதல் வேடந்தாங்கல் வரை:பின்பனிக்காலத்தில் இரவுப் பயணமும் விடிகாலைப் பயணமும் சகித்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது. எனது தங்கையின் சொந்த காரும் தற்காலிக ஓட்டுனரும் கைகொடுக்க 700கி.மீ முதல் 800 கி.மீ பயணம் முதல் நாள் விடிகாலை4.00 மணியளவில் புறப்பட்டு மறுநாள் நள்ளிரவு 2.30 மணிக்கு புறப்பட்ட இடம் வந்து சேர.

முதலில் திருமலைக்கோடி எனப்படும் ஷ்ரீபுரம் போக அங்கு ஐய்யப்ப பக்தர்கள் குவிந்திருந்தனர். திருமலைத் திருப்பதி போல இங்கும் பட்டி போட்டுவிட்டார்கள். ஆனால் அவ்வளவு காலம் தாமதம் அல்ல. இந்த ஷக்தி அம்மா எனப்படும் குருஜிக்கு 35 வயதுதான் ஆகிறது 16 வயதில் இந்தப் பக்கம் வந்ததாகவும் இந்த திட்டத்தை ஆரம்பித்ததாகவும் குறிப்புகள் உள்ளன. 19 ஆண்டுகளில் இந்த வளர்ச்சி. சொல்லி மாளாது. நேரில் பார்த்தால் தான் தெரிந்துகொள்ள முடியும். எல்லா முக்கிய பொறுப்புகளும் கன்னட மனிதர்களிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ் வியாபாரிகள் வளாகத்துக்கு வெளியே பிச்சைக்காரர்களைப் போல் வழக்கம்போல் பாசி ஊசி; செய்வினைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

100 ஏக்கர் நிலம் தோட்டமாக; ஊற்றாக ; குளமாக; கோயிலாக; வணிக வளாகமாக; பூரித்துக் கிடக்கிறது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை மதிய உணவும் கொடுக்கிறார்கள். வாழை இலையில் மணக்க மணக்க சுடச் சுட 3 முறை அளவின்றி சாம்பார், ரஸம்; மோர், பொறியலுடன். முதலில் தரும் உணவே நம் போன்றோர்க்கு போதும் உழைக்கும் வர்க்கம் 3 முறையும் வாங்கி சாப்பிடுகிறது நிறைவாக.மற்ற நேரங்களில் தொன்னைகளில் பிரசாதம் தருகிறார்கள். அன்னதானம் தானியமாகவோ பணமாகவோ வழங்கலாம். எல்லாவற்றுக்கும் ஒரு கட்டணம் நாராயணியைக் கும்பிடுவதைத் தவிர. இவ்வளவு ஏரிநிலமும் இவருக்கு எப்படிக் கொடுத்தார்கள் இவரிடம் அல்லது இந்த அறக் கட்டளையிடம் எப்படி சுமார் அல்லது தோராயமாக (சொல்லக் கேள்வி) 3 டன் தங்கம் கிடைத்தது என்பதெல்லாம் ஆராய்ச்சிக்குரிய கேள்விகள். நாகராஜ் என்று பேர் சொன்னார்கள் அது சரியோ தவறோ? இந்த அம்மா மேல்மருவத்தூர் அம்மா போல குடும்பஸ்தர் அல்ல இந்த ஷக்தி அம்மா ஒரு இளைஞர் இவர் நல்ல சேவை செய்திருப்பதாக சில விளம்பர போர்டு அறிக்கைகள் காண்பிக்கின்றன.கோயிலில் இன்னும் 2 மேல்விதானக் கூரைகள் மட்டும் சிறியதாக தங்கத் தகடுகள் இன்னும் வேயப்படாமல் உள்ளது மற்றபடி எல்லாம் தங்கத்தகட்டால் மூடப்பட்டு உள்ளன. நாராயணி தங்க வீட்டில் குடி கொண்டிருக்கிறாள் என்பதாக செய்திருக்கிறார்கள். பார்வையாளர்களும் உள் சென்று வணங்கலாம். ஆனால் எவரும் தங்கத்தை தொடமுடியாதபடி அகழி சுற்றியும் வெட்டப்பட்டு நீரால் நிரப்பப்பட்டுள்ளது. ஓடிவரும் படி நீரில் எதையும் போடாதீர்கள் என்கிறார்கள் விளம்பரப்பலகை வைத்தும் அறிவுறுத்தியுள்ளனர் ஆனால் பார்வையாளர்கள்: வளையல்கள்; காசு; பணம்; டெபிட் கார்டு; கிரிடிட் கார்டுகள் இன்னும் விசிட்டிங் கார்டுகள் எல்லாம் விசிறி உள்ளனர். மடத்தனத்துக்கு ஒரு அளவில்லாமல்.

எல்லா மதங்களையும் வளைத்துப் போடும் வண்ணம் இருக்கிறது இந்த திட்டத்தின் அமைப்பு, இந்து; முஸ்லீம்; கிறிஸ்தவர்; வெளி நாட்டவர் எவருமே பாகுபாடின்றி வந்துசெல்வதும் தமிழ்; ஆங்கிலம்; இந்தி; கன்னடம்; தெலுங்கு ஆகிய 5 மொழிகளிலும் எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவகையில் பார்த்தால் அமிர்தஸரஸ் பொற்கோயில் போலவும் மறுவகையில் பார்த்தால் தாஜ்மஹால் முன் உள்ள நீர் ஊற்றுகள் உள்ள அமைப்புடனான பூங்காவும் காணப்படுகிறது. முக்யமான நபர்கள் வரும்போதுமட்டும் இந்த வழிகள் திறக்கப்படுகின்றன. இவ்வளவு பணம் செழிக்கும் பூங்காவில் இன்னும் பணம் பணம் என்று எல்லாம் விற்றுக் கொண்டிருப்பது இவர்களின் தொழில் நுட்பம் பறைசாற்றுகிறது. எவ்வளவு பணமானாலும் அள்ள அள்ள கிள்ள் கிள்ள குறைந்து விடுமே அதை தக்கவைக்க திட்டத்தை மேலும் வளர்க்க இந்த வியாபார உத்தி எல்லாம் தேவைதான்.

எல்லாவற்றையும் மீறி எனக்கு ஒரு கம்யூனிசப் பார்வை அங்கு வந்தது அது: இந்த தங்கக் கோயில் திருப்பதி; மேல்மருவத்தூர்; அமிர்தானந்தமயி; சாயிபாபா அறக்கட்டளை எல்லாவற்றையும் பிடிங்கினால் போதுமே இந்தியாவில் ஏழ்மை இருக்காதே என்று. ஆனால் நிர்வாகம்; நிறுவனம் எல்லாம் சுத்தமாக தெளிவாக இருப்பதாக மேம்பார்வைக்கு தெரிகிறது. உள்ளே என்னவோ தெரியவில்லை. எனக்கு வாயடைத்துப் போனது இதை எல்லாம் பார்க்க பார்க்க: ஏன் எனில் நானும் சேவை செய்தேன் வியாதிகளைத்தான் பெற்றேன் வலைதளத்துக்கு முழுக்கட்டணம் கூட கட்டமுடியாமல்தான் எனது பயணம் சென்று கொண்டிருக்க எப்படி இவர்களால் இப்படி எல்லாம் உண்மையாகவே கடவுள் அருள் பெற்றவர்களோ? இவருடன் எஸ்.எம்.கிருஷ்ணா முதல் இறந்து போன பங்காரப்பா; தேவகவுடா;ராமகிருஷ்ண ஹெக்டே இப்படி எல்லா கர்நாடகா பெரும்புள்ளிகளுக்கும் தொடர்பிருப்பதாகவும் அவர்களின் கறுப்புப் பணம் இப்படி மடைமாற்றம் செய்யப்படுகிறது என ஒரு கருத்தும் இல்லை இது எல்லாம் மேலைநாட்டிலிருந்து இந்த திட்டத்துக்கு தரப்படும் நிதி உதவியிலிருந்தே வருகிறது என மறு கருத்தும் உலவுகிறது.

அடுத்து ஒரு நமது தமிழக அரசின் பார்வை படாத செய்தி: செய்யாறு என்றும் திருவந்திபுரம் என்றும் ஒரே ஊருக்கு 2 பெயர்கள். எல்லா மைல் கல்லிலும் மாற்றி மாற்றி குறிப்பிடுகிறது. வெள்ளையர் காலத்துப் பெயர் செய்யாறு என்றும் அது இன்றும் தொடர்கிறது என்றும் தமிழில் திருவந்திபுரம் என அழைக்கப்படுகிறது என்றும். புதிதாக ப்யணம் செய்பவர்க்கு இந்த விஷியம் தெரியாதவர்க்கு இது குழப்பம் ஏற்படுத்தாதா? ஏன் அரசு இதை ஒரே பெயர் கொண்டு எல்லா மைல் கல்லிலும் உபயோகப்படுத்தக் கூடாது? இந்த சின்ன விஷியத்தைக்கூட இதுவரை செய்யாத தமிழக அரசுகள் ஏன் பெயரை மட்டும் மாற்றி வைக்கவேண்டும் என்பதுதான் எனது கேள்வி.

மானாம்பதி; புலிவாய்; பால்வார்த்து வென்றான்; பழிக்கஞ்சி; உத்திரமேரூர் இப்படி எவ்வளவு அழகான தமிழ் பெயர்கள் ஊர்களுக்கு. அந்தப்பக்கம் பயணம் செய்வதே பெருமையான விஷியமாய் இருக்கிறது. உத்திரமேரூரில்: பரமேஸ்வர வர்மனால்-பல்லவ மன்னரால் பராந்தக சோழர் காலத்து கல்வெட்டு தேர்தல் வரைமுறைகளையும் அதில் நிற்பவர்களின் ஒழுக்க நெறிகளையும் குறிப்பிட்டுள்ளது. 30 குடும்பங்களுக்கு ஒரு பிரதிநிதி என்றும் அவர் பஞ்சமா பாவங்கள் எதுவும் செய்யாதவராகவும் (கொலை; கொள்ளை,அடுத்தவர் மனைவியுடன் உறவு கொள்ளாமை போன்றவை) தேர்தல் முடிந்தவுடன் கணக்கு காண்பிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர் அந்த சமுதாயத்திலிருந்தே உறவுகளிடமிருந்தேகூட விலக்கிவைக்கப்படவேண்டியவர் என்றும் குறிப்பிடுகிறது . அந்தக் காலத்திலேயே தமிழ் நெறி கொடி கட்டிப்பறந்ததன் பறை சாற்று இந்தக் கல்வெட்டு ஆனால் படிக்கமுடியாமல் மிகவும் மங்கலான எழுத்துக்களாகி காணப்படுகின்றன. இதை அதில் உள்ளது இதில் என புதிதாக செதுக்கி வைக்கலாம் அரசு என்பது எனது கருத்து இல்லையேல் நாளடைவில் இது இல்லாமல் போய்விடும்.

இந்த உத்திரமேரூர் கள்ளச்சாராயம் இல்லாத ஊர் எனப் பறை சாற்றுகிறது. ஆனால் எலைட்கடைகளை அரசு திறந்து வரும் இந்தக் காலத்துக்கு இது எத்தனை தூரம் பெருமைசேர்க்கும் என்றுதான் தெரியவில்லை. எனது நண்பர் ஒருவர் பேருந்தில் கலாட்டா செய்தபடியும் வயது முதிர்ந்த பெண்ணிடம் வம்பு செய்த ஒரு குடிகார இளைஞரை நையப் புடைத்ததாக சொல்லி கருத்து கேட்டார் நாம் அடித்து திருத்த முடியுமா? எத்தனை குடிகாரர்களைத்தான் அடித்து திருத்தமுடியும்?

உத்திரமேரூர் ஊரிலிருந்து அருமையான இருகாளை மாடு பூட்டிய வண்டி சிங்காரமாக அலங்காரத்துடன் குடும்பத்துடன் புறப்பட்டு ஜல் ஜல் என ஓடிக் கொண்டிருந்தது பார்க்கவே எத்தனை காணக்கிடைக்காத காட்சி. கைதட்டி கொண்டாடினோம் அது போன்ற நிறைய வண்டிகள் ஒரு கோயிலில் சென்று நின்று கொண்டிருந்தன பூஜைக்காக. அந்த ஊரில் நான் பிறக்கவில்லையே அந்த குடும்பங்களில் ஒன்றாக எனது குடும்பம் இல்லையே என்று ஏங்கவைக்குமளவு அந்தக் காட்சிகள். என்னதான் விஞ்ஞானம் முன்னேறினாலும் அந்த இயற்கையோடு ஒன்றிய மாட்டுவண்டிக் காட்சிகளும் வழியெங்கும் காடுகளில் வைத்துக் கொண்டிருந்த மாட்டுப் பொங்கலும் இன்னும் தமிழகத்தில் பொங்கல் திருவிழா இருக்கிறது எனச் சொல்லி மகிழ்வூட்டியது.

 

 

அடுத்து வேடந்தாங்கல்: நாங்கள் பைனாகுலரை மறந்து சென்றோம். என்னிடம் உள்ளது ஒரு யு.எஸ்.எஸ்.ஆர் மேக் .5கி.மீ வரி அருமையாக காண்பிக்கும்.கையடக்கமானது. எனது தங்கை குடும்பமும் மற்ந்துதான் வந்திருந்தது. வேடந்தாங்கல்: வேடன் தங்கல் என்ற தமிழ் பெயரிலிருந்து மருவி ஆகியிருக்கும் என நினைக்கிறேன். மரங்களில் பறவைகள் ஈக்களைப் போல் ஒட்டிக் கிடந்தன. மாலை நேரம் அந்தி சாயும் வேளை அப்பப்பா என்ன காட்சி கண் கொள்ளா காட்சி. எவ்வளவு பெரிய பறவைகள் எல்லாம் முக்யமாக கொக்கு; வாத்து இனங்களில் கண்டம் விட்டு கண்டம் வந்து கூடு கட்ட குச்சிகளை ஒடித்து குஞ்சி பொறித்து குடும்பம் நடத்தி பிறகு பிப்ரவரி மார்ச் மாதங்களில் திரும்பவும் தமது இருப்பிடத்துக்கு திரும்பி செல்கிறதாம். எனது மகன் 8ஆம் வகுப்பு, தங்கை மகன்;9ஆம் வகுப்பு; மகள் சுற்றுப்புறச் சூழல் பொறியியல் – 3ஆம் ஆண்டு மாணவி என அவர்களை விட நாங்களும் மாணவர்களானோம்; குழந்தைகளானோம். இது நமது தமிழக அரசின் ஒரு வெற்றித் திட்டம். எல்லாம் பாடங்களில் படித்து பயனில்லை. சென்று காண வேண்டிய அற்புதமான இடம் செல்ல வேண்டும் என்றால்: நவம்பர் முதல் பிப்ரவரிக்குள் செல்லுங்கள். நல்ல கூட்டம் பறவைகளையும் மனிதர்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

அடுத்து தென்னாங்கூர் பண்டரி நாதர் ஆலயம்: ஒரிஸ்ஸா கோனார்க் மாதிரியில். ஒரே வார்த்தையில் சொன்னால் படு சூபர்ப். பார்க்கவேண்டிய கோயில் ; இரசிக்க வேண்டிய கோயில் கிருஷ்ணர் துணைவியுடன் ஆளுயரம் நின்று அருள் பாலிக்கிறார். அருமையான வடக்கத்திய வேலைப்பாடு. துளஸி இலையும் நீரும்தான் பிரசாதம். அருமையாக சுத்தமாக இதை எல்லாம் சொல்லில் எடுத்து வரமுடியாது சென்றுதான அனுபவிக்க வேண்டும்.
குளிரில் இரவுப் பயணம். சரியான உணவு தூயமையாக கொடுக்க முடியாத உணவகங்கள் இவற்றை எல்லாம் பார்த்த காட்சிகளும் அனுபவங்களும் தூசாக பறக்கடித்துவிட்டன. சளி பிடித்துக் கொண்டது பனிப்பயணத்தினால். திரும்பவும் திருவண்ணாமலை வந்து திரும்பினோம். சாலைகள் நிறைய இடங்களில் மோசம். எங்களுடையது புது கார் என்பதாலும் ஓட்டுனர் இளைஞர் என்பதாலும் தாக்குபிடிக்க முடிந்தது.

அரூர் முதல் சேலம் வரை ஒரு வண்டியைக் கூட க் காணோம். நள்ளிரவு. மலை மற்றும் காட்டுப் பாதை. ஒரே அளவான வேகம் அருமையான பயணம் எந்த போக்குவரத்து தொல்லைகளும் இன்றி எல்லாம் ஒரு சுகம்தான் . அதுவும் எனது தங்கை குடும்பம் எமக்களித்தது. எம்மை அனுபவிக்க வைத்த இறைக்கு ; கடவுளுக்கு நன்றி செலுத்தி பயணம் ஆரம்பித்தோம். முடித்தோம்.

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.

2 Responses to திருமலைக்கோடி முதல் வேடந்தாங்கல்

  1. அருமையான சுற்றுலா பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி ஐயா.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 192 other followers