15 தங்கப் பதக்கங்கள் மற்றும் சிறந்த மாணவருக்கான 2 விருதுகளைப் பெற்று சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் சாதனை படைத்துள்ளார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) 2009 – 2015-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிறைவுச் சான்றிதழ் வழங்கும் விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதில் எஸ்.விக்னேஷ் (23) என்ற மாணவர் 15 தங்கப் பதக்கங்களையும், சிறந்த மாணவருக்கான 2 விருதுகளையும் பெற்று கல்லூரியில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 479 மதிப்பெண்களும், பிளஸ் டூ பொதுத்தேர்வில் 1,200-க்கு 1,183 மதிப்பெண்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக டாக்டர் எஸ்.விக்னேஷ் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டிதான் என்னுடைய சொந்த ஊர். தந்தை யு.செல்வமுருகன். தாய் எஸ்.அமுதா. தந்தை கோவையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். என்னுடைய தங்கை கீர்த்தி பிரியா முதலாம் ஆண்டு பல் மருத்துவம் (பிடிஎஸ்) படித்து வருகிறார். சென்னை மருத்துவக் கல்லூரியில் 15 தங்கப் பதக்கங்களையும், சிறந்த மாணவருக்கான 2 விருதுகளையும் பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனது வெற்றிக்கு உறுதுணை யாக இருந்த பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் அடுத்தக் கட்டமாக மருத்துவ மேற்படிப்பான எம்டி அல்லது எம்எஸ் படிக்க இருக்கிறேன். ஏழை, எளிய மக்களுக்கு சிறந்த தரமான மருத்துவ சேவை அளிப்பதே என்னுடைய வாழ்க்கையின் லட்சியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெரும்பாலும் சென்னை மருத்துவக் கல்லூரியில் முதல் இடம் பிடிக்கும் மாணவரோ அல்லது மாணவியோதான் மாநில அளவில் முதல் இடம் பிடிப்பார்கள். சென்னை மருத் துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்த எஸ்.விக்னேஷ் 15 தங்கப் பதக்கங்களையும், சிறந்த மாணவருக்கான விருதை யும் பெற்று முதல் இடம் பிடித்து உள்ளார்.

இந்த மாணவர் மாநில அளவில் முதல் இடம் பிடிக்க அதிகம் வாய்ப்புள்ளதாக சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.